பழ கருப்பையா அவர்களின் இந்த சொற்பொழிவு மனதுக்கு சற்று வேதனை அளித்தது.
பத்து முறை சிறை சென்றோம், கை ஒடிக்கப்பட்டது, பத்தொன்பது
நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம், பல காட்சிகளில் இருந்தோம்
என்றல்லாது என்ன சாதித்துவிட்டோம் என்று ஒரு ஏக்கமும் தனக்கு முன்பாக ஒரு சூனியமும்
உள்ளது போல் அவர் பேசும்போது, சிலுவையில் யேசுநாதர், 'இறைவனே ஏன் என்னை கைவிட்டீர்', என்று மன்றாடும் குரல் கேட்கிறது.
இது போன்ற ஒரு மனநிலையில்தான் தான் இருந்ததாக
இப்போதைய வழக்கறிஞரும் சாய் பக்தனும் முன்னாள் நக்ஸால்வாதியும் ஆன திரு
பிலிப் M பிரசாத் கூறுகிறார்.
இப்படிப்பட்ட ஒரு தோய்வும் மனக்கலக்கமும் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல்
ஒரு இலட்சியத்தோடு செயல்படும் எவருக்கும், அந்த
இலட்சியம் கைகூடாமல் போகும்போது வரக்கூடியதே.
தனிப்பட்ட இலாபத்திற்க்காக செயல்படுபவர்களுக்கு இந்த இக்கட்டு இருப்பது இல்லை.
கரணம், இலாபம் ஈட்ட வேண்டும் என்ற இலக்கு
எப்போதும் அவர்களுக்கு முன்பாக இருந்துகொண்டே இருக்கும். அதற்க்காக அவர்கள் எத்துணை நாட்களும்
காத்திருக்க தயாராகவே இருப்பார்கள். அவர்களுக்கு மிகுந்த பொறுமையும் இருப்பதை
காண்கிறோம்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் உச்சத்தில் இருந்த ஒருபொழுதில் வினோபா அவர்கள்
காந்தியரிடம் ஒரு கேள்வி கேட்கிறார். இதுவெல்லாம் எப்படி முடியும் என்று
நினைக்கிறீர்கள் என்று. வினோபா ஒன்றும் ஆன்மிகத்தில் இளைத்தவர் அல்ல. தன்னுடைய சீடராய் வந்த தனது குரு என்று அவரை
காந்தியாரே கூறுகிறார். ஒருவேளை காந்தியடிகள்
மனதில் உள்ளதை அறிவதற்காக அதை கேட்டாரா என்பது தெரியவில்லை. அந்த கேள்விக்கு காந்தியார் வார்த்தையால் பதில்
அளிக்கவில்லை. ஒரு புன்னகையுடன் கை விரலால் ஒரு பூஜ்யத்தை வரைந்து காட்டினாராம்.
அந்தத்தெளிவு இருந்தும் காந்தியரோ விநோபாவோ தமது செயல்களை சற்றும் குறைத்துக்கொள்ளவில்லை.
பல முறை நண்பர்கள் கூறுகிறார்கள் - ஏன் செயல்பட வேண்டும், யாருக்காக, மனிதர்கள்
நன்றிகெட்டவர்கள், என்றெல்லாம் .
ஒரே ஒரு பதிலைத்தான் கூறி வந்திருக்கிறேன் , ' நாம் யார் என்றோ எதற்க்காகப்பிறந்தோம் என்றோ எல்லாம் தெரியாத வரை, எது சரி என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் படுகிறதோ
அதை முடிந்தவரை சரியாக செய்துவிட்டு மற்றதை நம்மை வழிநடத்தும் அந்த சக்திகள்
கையில் ஒப்படைத்துவிட்டால் நிம்மதி'
என்பதே.
91 இல் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு
வருகிறது:
"மலரே ஏன் மலர்கின்றாய்?
உன்னை உருவாக்கும் கணமெல்லாம்
உன் மரணத்தை அழைக்கையிலே
மலர்ந்தேன் நீ மாய்கின்றாய்?
மதிகெட்ட மலரே நீ
சற்றேனும் சிந்திப்பாய்."
மலர் மெல்ல நகைத்தது
'நான் எதுவும்
நினைப்பதில்லை
வீணாகப்பிதற்றாதே'.
மலர் மீண்டும் மலர்தது
பின் தளர்ந்தது, கீழே உதிர்ந்தது.
மலர் மீண்டும் மலர்தது .
No comments:
Post a Comment